Homeசெய்திகள்ஜகத்குரு ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு

ஜகத்குரு ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு

ஜகத்குரு ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்கச் திகட்டாத ஒன்று. அவர் தன் மிகக்குறுகிய வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். மிகவும் நலிவுற்று இருந்த  இந்து மதத்தையும் வேதங்களையும் காத்து அருளினார். பல நூல்களை இயற்றியுள்ளார். பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி இந்து மதத்தை பரப்பினார். இனி அவரின் வாழ்க்கை வரலாற்றை காணலாம்.

Table of Contents

ஆதிசங்கரரின் பிறப்பு

காலடி என்னும் ஊரில் சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது.

இதை பார்த்த பெரியோர்கள் அவர்களுக்கு ஒரு ஆலோசனை கூறினர். திருச்சூர் என்னும் ஊரில் வடக்குநாதன் என்ற பெயருடன் சிவபெருமான் எழுந்து அருளியுள்ளார். அவரை தொடர்ந்து ஒரு மண்டலம் பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினர். சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினரும் பெரியோர்களின் அறிவுரைப்படி மிகுந்த பக்தியுடன் பூஜை செய்தனர்.

அவர்களின் தூய்மையான பக்தியை கண்டு மகிழ்ந்தார் வடக்குநாதர். அவர்கள் கனவில் தோன்றி உங்களுக்கு  புத்திர பாக்கியம் உண்டாகும். ஆனால் ஒரு நிபந்தனை. உங்களுக்கு அறிவில் ஒழுக்கத்தில் சிறந்த ஆனால் ஆயுள் குறைந்த ஒரே ஒரு குழந்தை கிடைக்கும். அல்லது அறிவற்ற, ஆயுள் குன்றிய பல குழந்தைகள் கிடைக்கும். இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். ஆனால் பக்தியில் சிறந்த அந்த தம்பதியினர் தங்களுக்கு எதை குடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். தாங்கள் எதை குடுத்தாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வோம் என்றனர். 

இந்த பதிலால் உள்ளம் மகிழ்ந்த ஈசன் தானே உங்களுக்கு மகனாக பிறப்பேன் என்று ஆசி கூறினார். இதனால் உள்ளம் மகிழ்ந்த தம்பதியினர் தங்கள் ஊரான காலடிக்கு திரும்பினர்.

இறைவன் அளித்த வரத்தின் படி காலடியில் வைகாசி மாதம், வளர்பிறை 5ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானே ஆர்யாம்பாளுக்கு மகனாக பிறந்தார். சிவகுரு தம்பதியினர் அந்த குழந்தைக்கு சங்கரன் என பெயரிட்டனர். குழந்தையின் தெய்வீக அழகை கண்ட மக்கள் இது சாதாரண குழந்தை இல்லை. இது தெய்வீக குழந்தை என்பதை உணர்ந்தனர்.

குறிப்பு: சங்கரர் காலம் கிமு 509 – 477 என்றும் கிபி 788 – 820 என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இயற்றிய நூல்கள்.

சங்கரரின் கல்வி

சங்கரருக்கு 3 வயதில் எழுத படிக்க கற்று கொடுத்தனர். அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு முறை படித்தாலே அனைத்தையும் மனப்பாடம் செய்யும் ஆற்றல் இருந்தது. எனவே அவர் 3 வயதிலேயே அணைத்து சாஸ்திரங்களையும் படித்து தேர்ந்தார். இந்நிலையில் சங்கரர் தன் 4 வயதில் தன் தந்தையை இழந்தார். இந்த துயர நிகழ்விலிருந்து மீண்டு ஆர்யாம்பாள் சங்கரருக்கு 5வது வயதில் பூணூல் கல்யாணம் செய்து வைத்தார். 

பின் சங்கரர் கல்வி பயில குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். அந்நாளில் மாணவர்கள் தங்கள் கல்வி முடியும் வரை ஆசிரியருடன் தங்கி அவருக்கு சேவைகள் செய்து கல்வி பயில வேண்டும். குருகுலத்தில் சங்கரர் கல்வியில் சிறந்து விளங்கினார். தன் குருவின் தேவைகளை குறிப்பறிந்து நிறைவேற்றினார். தினமும் பிச்சைக்கு சென்று சேகரித்த பொருட்களை குருவிடம் சமர்பிப்பார்.

கனகதாரா ஸ்தோத்திரம் உருவாக காரணம்

ஒரு நாள் துவாதசி அன்று சங்கரர் பிட்சைக்கு சென்றார். அந்த வீட்டில் ஒரு பரம ஏழை வாழ்ந்து வந்தார். அவள் வீட்டில் எந்த ஒரு உணவு பொருளும் இல்லை. அந்த பெண்மணி வருந்தினாள். தன் வீட்டிற்கு வந்த ப்ரஹ்மச்சாரி சிறுவனுக்கு ஏதும் அளிக்க முடியவில்லையே என்று வருந்தினாள். அப்போது ஒரே ஒரு நெல்லிக்கனி இருப்பதை கண்டாள். அதை தனக்கு என்று வைத்துக்கொள்ளமால் அதை சங்கரருக்கு அளித்தாள்.

இதை கண்ட சங்கரர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனவே அந்த பெண்ணின் வறுமையை போக்க எண்ணினார். ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நினைத்து துதிக்க ஆரம்பித்தார். சங்கரர் துதியை முடிக்கும் தருவாயில் மஹாலக்ஷ்மி தோன்றி ஏழை பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிந்தாள். இவ்வாறு தோன்றிய இந்த துதி கனகதாரஸ்தவம் என்று அழைக்க படிக்கிறது.

அறிவில் சிறந்து விளங்கிய சங்கரர் தன் 8 வயதில் அனைத்து வேத வேதாந்த நூல்களையும் கற்று தேர்ந்தார். வீடு திரும்பிய சங்கரர் தன்  அன்னையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். 

ஆர்யாம்பாள் தினமும் பூர்ணா நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ஆர்யாம்பாளுக்கு உடல் நலக்கோளாறு உண்டாயிற்று. எனவே அவளால் பூர்ணா நதியில் குளிக்க செல்ல முடியவில்லை. அதனால் மனம் மிகவும் வருந்தினாள். இதை கண்ட சங்கரர் பூர்ணா நதியை தன் வீட்டின் வழியே செல்ல வேண்டினார். சங்கரரின் வாக்குக்கு கட்டுப்பட்டு பூர்ணா நதி சங்கரரின் வீட்டின் வழியே ஓட தொடங்கியது. இதை கண்ட ஆர்யாம்பாளும் ஊர் மக்களும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்.

சங்கரர் துறவறம் பேணுதல்

ஒரு நாள் சப்த ரிஷிகள் சங்கரரை காண வந்தனர். அவரிடம் தாங்கள் துறவறம் பூண்டு ஆன்மீக கருத்தை பரப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என எடுத்துத்துரைத்தனர். சங்கரரும் அவர்களது கருத்தை ஆமோதிதார். கூடிய விரைவில் துறவறம் பூண்டு நாடு முழுக்க சென்று ஆன்மீகத்தை பரப்புவேன் என்றார். தன தாயிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி வாங்க திட்டம் தீட்டினார்.

வழக்கம் போல் பூர்ணா நதியில் நீராட சென்றார். அப்போது ஒரு முதலை சங்கரரின் காலை கவ்வியது. சங்கரர் அம்மா அம்மா என்று அலறினார். ஆர்யாம்பாள் துடி துடித்து விட்டாள். சங்கரரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் தவித்தாள். சங்கரரே ஒரு உபாயம் சொன்னார். 

இந்த பிறவியில் ஒரு முதலையால் நான் கொல்லபட வேண்டும் என்பது விதி. தாங்கள் எனக்கு துறவறம் ஏற்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் முதலை என்னை விட்டு விடும். ஏனென்றால் சன்யாசம் என்பது மறு பிறவியாகும். ஆதலால் நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றல் சன்யாசம் ஏற்க வேண்டும் என்றார். ஆர்யாம்பாள் தன் மகன் உயிரோடு இருந்தால் போதும் என்று எண்ணி சம்மதித்தாள்.

சங்கரர் பூர்ணா நதியிலே துறவு மேற்கொள்ள ஆபத் சந்நியாசம் என்ற முறையில் தானே மந்திரத்தை கூறி துறவு பூண்டார். எனினும் முறைப்படி ஒரு குருவிடம் இருந்து சன்யாசம் பெற விரும்பிய சங்கரர் குருவை தேடி புறப்பட்டார். 

இவ்வாறு அவர் நர்மதை நதிக்கரையை வந்தடைந்தார். அங்கு நர்மதை பெரு வெள்ளமாக ஓடி கொண்டிருந்தது. சங்கரர் தன் சக்தியால் நர்மதை நீரை கமண்டலத்தினுள் அடக்கினார். பின் அதை மக்கள் உபயோகிக்கும் படி ஓட விட்டார். இதை பார்த்து கொண்டிருந்த கோவிந்த பகவத் பாதர் வியந்து சங்கரரை தன சீடராக ஏற்று கொண்டார்.

கோவிந்தர் முறைப்படி துறவறம் மந்திரம் உபதேசித்து சங்கரருக்கு சன்யாசம் அளித்தார். பின் கோவிந்தர் அத்வைத சிந்தாந்தத்தை சங்கரருக்கு உபதேசித்தார். அனைத்தையும் கற்று தேர்ந்தார் சங்கரர். உலகெங்கும் அத்வைத கோட்பாடுகளை பரப்ப சங்கரருக்கு ஆணையிட்டார் கோவிந்தர். குருவின் ஆணைக்கிணங்க அத்வைதத்தை பரப்ப புறப்பட்டார் சங்கரர்.

அவ்வாறு புறப்பட்ட சங்கரர் காசியை வந்தடைந்தார். அங்கு அவரின் புலமையை கண்ட பலர் அவரின் சீடராக சேர்ந்தனர். சங்கரர் தன் புலமையால் பிற மதத்தவரையும் அத்வைதத்தை ஏற்க வைத்தார்.

சநந்தனர் என்ற சீடர் பத்ம பாதர் என பெயர் பெற்ற நிகழ்வு:

பண்டைய நாட்களில் காசி அறிஞர் மற்றும் சான்றோர்களால் நிறைந்து இருந்தது. எனவே பலர் குருவை தேடி காசி மாநகருக்கு வந்தனர். அவ்விதம் சநந்தனர் என்னும் இளைஞன் தனக்கான குருவைத்தேடி காசிக்கு வந்தார். அங்கு சங்கரரை தரிசித்து அவரிடம் சீடராக சேர்ந்தார். அவர் சங்கரரிடம் அபரிமிதமான பக்தியுடன் சேவை செய்து கல்வி பயின்று வந்தார். ஒரு முறை சங்கரர் தன் சீடன் சநந்தனருடைய பக்தியை உலகுக்கு காட்ட எண்ணினார். 

ஒரு நாள் சங்கரர் ஆற்றின் ஒரு கரையில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். மறு கரையில் சநந்தனர் குருவின் துணிகளை துவைத்து காய வைத்து கொண்டிருந்தார். அப்போது சங்கரர் உரத்த குரலில் சநந்தனா, என் உடை நனைந்து விட்டது. உடனே காய்ந்த துணிகளை கொண்டுவா என்றார். 

குருவின் குரலை கேட்டார் சநந்தனர். படகு வைத்து கொண்டு நதியை கடக்க வேண்டும் என்பதையும் மறந்து நதியில் நடக்க ஆரம்பித்து விட்டார். இதை சங்கரரும் சீடர்களும் பார்த்தனர். 

சநந்தனர் ஆற்றில் மூழ்கமால் இருக்க அவர் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தாமரை மலரை மலர செய்தார் சங்கரர். சநந்தனர் அந்த தாமரை மலரின் உதவியால் ஆற்றில் மூழ்கமால் மறு கரை வந்தடைந்தார்.  இதை கண்ட மற்ற சீடர்கள் அனைவரும் சநந்தனரின் பக்தியை உணர்ந்தனர். தாமரை மலரில் நடந்து வந்ததால் சங்கரர் அவருக்கு பத்ம பாதர் என பெயர் சூட்டினார்.

வியாசர் சங்கரருடன் விவாதம்

ஒரு சமயம் வயதான அந்தணர் சங்கரரை காண வந்தார். சங்கரர் இயற்றிய பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு எதிர் கருத்து எடுத்து வைத்தார். வயதான மனிதர் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் சங்கரர் தெளிவான பதில்களை கூறினார்.  ஆனால் அந்த அந்தணரும் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து கேள்வி கணைகளை வீசினார். விவாதம் பல நாட்களை கடந்து சென்றது.

இதை பார்த்து கொண்டிருந்த பத்ம பாதர் வியந்தார். மகா மேதையான தன் குருவிற்கு இணையாக அறிவிற் சிறந்து விளங்கும் இவரும் சாதாரண மனிதராக இருக்க முடியாது என்று எண்ணினார். தன் பக்தியால் வந்திருப்பவர் ப்ரஹ்ம சூத்திரத்தை இயற்றிய வியாச பகவானே என்று கண்டு கொண்டார். சங்கரரும் வந்திருப்பது  வியாஸ முனிவர் என்பதை அறிந்த உடன் மனம் வருந்தினார். சங்கரர் வ்யாஸரிடம் தங்களிடமே வாதிட்டு தவறு இழைத்துவிட்டேன் என்று கூறி ஆசி வேண்டினார்.

 வியாஸர் சங்கரருக்கு ஆசி வழங்கினார். நீ எழுதிய ப்ரஹ்ம சூத்திரத்திற்கான உரையை நான் ஏற்கிறேன். அதன் பெருமையை உலகிற்கு உணர்த்தவே உன்னுடன் விவாதிக்க வந்தேன் என்றார். அது மட்டும் அல்லாமல் உனக்கு 16 வயதுடன் ஆயுள் முடிகிறது. உனக்கு இன்னும் 16 ஆண்டுகள் அளிக்கிறேன். நீ பரஹ்ம சூத்திர பாஷ்யத்தை உலகம் முழுதும் பரப்பு என கூறி மறைந்தார். 

குமாரிலப்பட்டர் மற்றும் மண்டன மிச்ரரை ஆட்கொள்ளுதல்

வியாச முனிவரின் கட்டளைப்படி காசியிலிருந்து புறப்பட்ட சங்கரர் பிரயாகைக்கு வந்து சேர்ந்தார். அங்கு குமாரிலப்பட்டர் என்பவரை காண சென்றார். அவரையும் அவரது சீடர்களையும் கர்மா மீமாம்சகர்கள் என்று அழைப்பார்கள். புத்த மதத்தை சேர்ந்தவர்கள் வேதத்தை ஏற்க மாட்டார்கள். குமாரிலப்பட்டர் பௌத்த வேடம் பூண்டு அவர்களுடன் பழகி அவர்களின் கருத்துக்களை கற்றார்.பின் வேத கோட்பாடுகளை கொண்டு அவர்களின் கோட்பாடுகளை கண்டித்தார்.

ஆனால் சிறிது காலம் கழித்து அவர் மனம் வருந்தினார். தன்னை நம்பிய புத்த மதத்தவரை ஏமாற்றிவிட்டோம் என எண்ணினார். எனவே தன் உயிரை தியாகம் செய்ய முடிவு செய்தார். அதற்காக தன்னை சுற்றி உமியை குவித்து அதில் தீ மூட்டினார்.அந்த வெக்கையில் தன் உயிரை விட முடிவு செய்தார். 

இந்த விஷத்தை கேள்வி பட்ட சங்கரர் அங்கு ஓடி வந்து அதை தடுத்தார். நீங்கள் செய்த செயலில் எந்த தவறும் இல்லை என்றார். அவருக்கு அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்தார். நீங்கள் தான் எனது நூல்களுக்கு உரை எழுத வேண்டும் என சங்கரர் கேட்டுக்கொண்டார். 

குமரிலபட்டர் தனக்கு அதில் விருப்பமில்லை என்றும், நர்மதை  நதிக்கரையில் அமைந்துள்ள மகிஷ்மதி என்னும் நகரில் மண்டனமிஸ்ரர் என்ற  வேதவிற்பன்னரிடம் வாதிக்கும் படியும் கூறினார். பின் உமி தீயில் தன் உயிரை தியாகம் செய்தார்.

குமரில பட்டரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.  நதியில் நீராடிய சங்கரரும் அவரது சீடர்களும் மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தனர். அவரது வீட்டின் கதவு மூடியிருந்தது.. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். 

உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்தார் சங்கரர். பின் மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார்.  மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை.  உபயபாரதியை நடுவராக நியமித்தனர். இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. முதலில் எவர் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே போட்டியில் தோற்றவர் என முடிவு செய்தனர்.

மண்டனமிஸ்ரர் தோற்றால் துறவறவரத்தையும், சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையையும் ஏற்க வேண்டும் என முடிவு செய்தனர். தொடர்ந்து ஏழு நாட்கள் வாதம் நடைபெற்றது. இறுதியில் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது.  உபயபாரதி, மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சுரேஷ்வராச்சாரியார் என பெயர் சூட்டி சன்யாச தீட்ஷை அளித்தார்.

மண்டன மிஸ்ரர் மற்றும் உபயபாரதி ப்ரஹ்மா மற்றும் சரஸ்வதியின் அவரதாரம்.  மண்டனமிஸ்ரர்  தோற்ற பிறகு உபயபாரதி சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அப்போது சங்கரர் வனதுர்கா மந்திரத்தை ஓதினார். அதன் மூலம் உபயபாரதி சத்யலோகம் செல்வதை தடுத்தார். நான் விரும்பும்வரை நீங்கள் பூமியிலேயே இருக்க வேண்டும் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள்.

காபாலிகனை பத்மபாதர் அழித்தல்

சங்கரர் சுரேஷ்வாச்சாரியார்  மற்றும் ஏனைய சீடர்களுடன் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் சென்றார். அங்கு மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது காபாலிகன் ஒருவன் வந்தான். அங்கு சங்கரர் துர்மதங்களை எதிர்த்து அத்வைதத்தை பரப்பி வந்தார். 

இதனால் தன்னுடைய மதமும் அழிந்து விடும் என அஞ்சிய காபாலிகன் எப்படியாவது சங்கரரை அழிக்க வேண்டும் எனமுடிவு செய்தான். அவன் சங்கரரிடம் நான் பல வருடங்களாக சிவ பெருமானை நோக்கி தவம் செய்து வருகிறேன். இந்த பூதஉடலுடன் கைலாயம் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். 

என் தவத்தின் பலனாக பரமசிவன் தோன்றி எல்லாம் அறிந்த சிறந்த ஞானி அல்லது சக்கரவர்த்தியின் தலையை அக்னியில் சமர்ப்பித்து ஹோமம் செய்தால் உன் ஆசை நிறைவேறும் என்றார். தாங்கள் ஒரு சிறந்த ஞானி. எனவே என் எண்ணம் நிறைவேற தாங்கள் உங்களுடைய தலையை தந்து உதவ வேண்டும் என்றார். அனைத்தும் அறிந்த சங்கரர் தன தலையை பலியாக கொடுக்க முன்வந்தார்.

நள்ளிரவில் தம் சீடர்களுக்குத் தெரியாமல் பைரவர் கோயிலுக்குச்  சென்றார். சங்கரர் தனியாக செல்வதை பார்த்த பத்மபாதர் தன் குருவிற்கு ஏதோ தீங்கு ஏற்பட போகிறது என உணர்ந்தார். தன் குருவை காக்கும் படி நரசிம்மரை வேண்டி நரசிம்ம மந்திரத்தை ஓதினார். நரசிம்ம மந்திரத்தின் மகிமையால் பத்மபாதர் தானே நரசிம்மமாகி சங்கரர் இருக்குமிடத்திற்கு சென்றார். பின் காபாலிகன் மேல் பாய்ந்து அவனைக் கொன்றார். தியானதிலிருந்து எழுந்த சங்கரர் நடந்ததை அறிந்து பத்மபாதரை ஆசிர்வதித்தார். 

இதன்பின் பல இடங்களில் யாத்திரை செய்தபின், கொல்லூர் மூகாம்பிகை தலத்திற்கு வந்தடைந்தார். அங்கு தன்  சிஷ்யர்களுடன் மூகாம்பிகையை தரிசித்து சில காலம் தங்கி இருந்தார். அப்போது ஒரு தம்பதிகள் தன் இறந்த புதல்வனின் சடலத்தை மடியில் வைத்து வருந்திக்கொண்டு இருந்தனர். சங்கரர் அவர்களின் துயரை எண்ணி மனம் உருகி கடவுளை வேண்டினார். சங்கரரின் வேண்டுதலின் பலனாக இறந்த சிறுவன் உயிர்தெழுந்தான்.

ஒருசமயம் கொல்லூரில் தங்கியிருந்த போது, சங்கரர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகையே கசாயம் தயாரித்து கொடுத்து சங்கரரின் காய்ச்சலை குணப்படுத்தினார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக இன்றும்  மூகாம்பிகைக்கு இரவு நைவேத்தியதுடன் கசாயமும் படைக்கப்படுகிறது.

ஹஸ்தமாலகருக்கு அருள் பாலித்தல்

சங்கரர் கர்நாடகாவில் உள்ள பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டார். அவ்வாறு ஸ்ரீவாடியில் இருக்கும்போது ஒரு அந்தணர் தன்னுடைய மூளை வளர்ச்சி இல்லாத வாய் பேச முடியாத மகனுடன் சங்கரரிடம் வந்தார். சங்கரரை வணங்கி தன் மகனை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும் என வேண்டினார். சிறுவனை உற்று நோக்கிய சங்கரர் அவனிடம் நீ யார்? ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்றார்.

சங்கரர் கேட்டவுடன் அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் ஆச்சர்யம் தரும் விதமாக பேச தொடங்கினான். நான் ஜடமில்லை. நான் சித்ஸ்வரூபி என்றான். பிறகு ஆத்ம தத்வத்தை விளக்கும் விதமாக 12 ஸ்லோகங்களை இயற்றினான். இந்த ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் என அழைக்கப்படுகிறது. இதற்கு சங்கரர் உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனுக்கு ஹஸ்தமாலகா என பெயர் சூட்டி தன் சீடனாக ஏற்றார். 

இதை பார்த்து வியந்த சீடர்கள் ஹஸ்தாமலகருக்கு எப்படி பாடம் கற்காமலே ஞானம் வந்தது என வினவ சங்கரர் அச்சிறுவனைப் பற்றி கூற தொடங்கினார். ஒரு முனிவர் யமுனா நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண்மணி தனது 2 வயது சிறுவனை அவரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள். 

ஆனால் அந்த குழந்தை நதியில் விழுந்து இறந்துவிட்டது. இதை பார்த்த மக்கள் அக்குழந்தையின் உடலை முனிவரிடம் கிடத்தி அழுதனர். இதை பார்த்து வருந்திய முனிவர் தன யோக சக்தியால் குழந்தையின் உடலில் புகுந்து அவனுக்கு உயிர் குடுத்தார். அச்சிறுவனே ஹஸ்தாமலகர் என என்றார் சங்கரர்.

தவளை, நாகப்பாம்பு நட்பு

இதன் பின் சங்கரர் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்திற்கு வந்தார். அங்கு மாமுனிவர் ரிஷ்யசிருங்கர் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு ஒரு தவளை கர்பமாக இருந்தது. வெயிலின் வெப்பம் தாங்காமல் தவித்த தவளைக்கு ஒரு நாகப் பாம்பு தன் தலையால் குடை பிடித்தது. 

இதை பார்த்த சங்கரர் வியந்தார். இயற்கையில் எதிரிகளான பாம்பும் தவளையும் சேர்ந்து இருப்பதை கண்ட சங்கரர் இந்த இடம் நிச்சயமாக ஒரு சக்திமிகுந்த இடமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணினார்.

எனவே இந்த இடத்தில் சாரதாபரமேஸ்வரிக்கு ஒரு ஆலயம் நிறுவ முடிவு செய்தார். முன்பு உபயபாரதியிடம் வைத்த வேண்டுகோள்படி அங்கு ஒரு ஆலயத்தை கட்டி  பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

தோடகாஷ்டகம் உருவான நிகழ்வு

சங்கரர் சிருங்கேரியில் இருக்கும் போது கிரி என்ற சீடர் மாணவனாக சேர்ந்தார். அவருக்கு பாடங்களை புரிந்துகொள்வதில் திறமை குறைவாக இருந்தது. ஆனால் சங்கரர் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். இதனால் மற்ற மாணவர்கள் கிரியை புறக்கணித்தனர். 

ஒரு நாள் கிரி குருவின் துணிகளை துவைக்க துங்கபத்திரா ஆற்றிற்கு சென்றார். ஆனால் கிரி திரும்புவதற்கு முன் வகுப்பு துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. சங்கரர் கிரி வந்தவுடன் வகுப்பு ஆரம்பிக்கலாம் என்றார். கிரியோ பாடங்களை கிரஹிப்பதில் மந்தமாக இருக்கிறார்; அவருக்காக நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று மற்ற சீடர்கள் கூறினர்.  

தம் சீடர்களுக்கு பாடம் புகட்ட விரும்பினார் சங்கரர். தன் ஆற்றலால் கிரிக்கு எல்லா வித்தைகளும் அறியும்படி அருள் புரிந்தார். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கிரி தம் குருவைப் பற்றி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் இயற்றினார்.. அவர் இயற்றிய இந்த துதியே தோடகாஷ்டகம் என அழைக்கப்படிகிறது. இதன் காரணமாக கிரிக்கு தோடகாச்சாரியார் என்ற பெயர் உண்டானது.

சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது சீடர்கள் பல நூல்களையும் சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்க உரையும் எழுதினார்கள். 

தன் தாய்க்கு இறுதி சடங்கு செய்தல்

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். தன் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி காலடி வந்தடைந்தார். சங்கரரை கண்ட ஆர்யாம்பாள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். சங்கரர் தன் தாயிடம் விரும்பியதை கேளுங்கள்  என்றார். 

அதற்கு ஆர்யாம்பாள் தனக்கு சிவலோகம் அனுப்ப வேண்டினார். சங்கரர் சிவனை நோக்கி சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் வேண்டினார். அப்போது கையில் சூலம் முதலிய ஆயுதங்களுடன் சிவகணங்கள் தோன்றினர். சிவகணங்களை பார்த்து பயந்த ஆர்யாம்பாளின்  விருப்பத்திற்கேற்ப மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தார். உடனே விஷ்ணு தூதர்கள் தோன்றி சங்கரரின் தாயாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தன் தாய்க்கு இறுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். அப்போது ஊரில் உள்ள அனைவரும் சந்நியாசி நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளை செய்ய கூடாது என எதிர்த்தனர். சங்கரர் தன் தாய்க்கு செய்து குடுத்த சத்தியத்தை எடுத்துக்கூறி தன் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை குறைவின்றி செய்தார்

பஞ்சபாதிகை என்ற நூலை மீட்டுக்கொடுத்தல்

ஒருமுறை பத்மபாதர்க்கு தீர்த்தயாத்திரை செல்ல வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதற்கு குருவிடம் அனுமதி கேட்டார். சங்கரர் யாத்திரையின் சிரமங்களை எடுத்துக்கூறியும் பத்மபாதர் உறுதியாக இருந்தார். எனவே சங்கரர் அனுமதி  குடுத்தார். 

அங்கிருந்து கிளம்பி  பல தலங்களுக்கு சென்றுவிட்டு ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்த பத்மபாதர் தனது தாய்மாமன் வீட்டில் தங்கினார். அவருடைய தாய்மாமன் வேற்றுமதத்தை பின்பற்றிக்கொண்டிருந்தார். அந்த மதத்தை கண்டித்து சங்கரர் எழுதிய நூலுக்கு பத்மபாதர் அழகான உரை எழுதி இருந்தார். 

எனவே தாய்மாமன் பத்மபாதர் மேல் மிகுந்த கோவம் கொண்டிருந்தார். எனினும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தார். இவ்வாறு இருக்கையில் பத்மபாதர் தான் ராமேஸ்வரம் செல்ல இருப்பதாகவும், அதுவரை தான் இயற்றிய நூலை பாதுகாக்கும்படி கூறினார். இதுவே தக்க தருணம் என எண்ணிய தாய்மாமன் அந்த புத்தகம் இருந்த வீட்டிற்கே தீ வைத்து விட்டார்.

ராமேஸ்வரம் சென்று திரும்பிய பத்மபாதர் வீடு தீ பற்றி எரிந்ததில் நூல்களும் அழிந்ததை நினைத்து வருந்தினார். எனினும் மீண்டும் அந்த நூலை எழுத போவதாக கூறினார். இதை கேட்ட மாமன், பத்மபாதர் மீண்டும் அந்த புத்தகத்தை எழுதாமல் இருக்க உணவில் விஷம் வைத்து விட்டார். பத்மபாதர் உயிர் பிழைத்தாலும் புத்தி பேதலித்துவிட்டது. எனவே அவரால் மீண்டும் எழுத முடியவில்லை. 

இதனால் வருந்திய பத்மபாதர் சங்கரரிடம் சென்று அனைத்தையும் கூறினார். அதை கேட்ட சங்கரர் கவலை படாதே. நீ அந்த புத்தகத்தை என்னிடம் வாசித்து காட்டியது என் நினைவில் உள்ளது. அதை நான் சொல்ல நீ எழுதிக்கொள் என்றார். இவ்வாறு தீயில் கருகி சங்கரரால் மீட்டு கொடுக்கப்பட்டதே  பஞ்சபாதிகை என்னும் நூல்.

சங்கரர் திக்விஜயம் செய்து பலரை வென்றார்

தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவு செய்தார். ராமேஸ்வரம் சென்று வணங்கியபின் காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளை பின்பற்றி வந்தனர். அதை மாற்ற எண்ணிய சங்கரர் சாக்தர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீசக்கரம் வைத்தபின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாக அருள் பாலித்தார். தாந்திரீக பூஜை முறையை வைதீக பூஜை முறையாக மாற்றினார். 

பிறகு காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார். அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். அங்கிருந்து கர்நாடகம் சென்ற சங்கரர் அங்கு காபாலிகர்களையும், பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார். அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான நீலகண்டரை வென்றார். அவரை அத்வைத சித்தாந்தத்தை ஏற்க வைத்தார். பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜைனி சென்றார்.

உஜ்ஜைனியில் பட்டபாஸ்கர் எனபவரை வென்றார். இதனால் ஜைனர்களால் எதிர்க்கப்பட்டாலும் அவர்களால் சங்கரரை வாதில் வெற்றி காண முடியவில்லை. பிறகு நவகுப்தர் என்ற சாக்தரை வென்றார். இதனால் கோவம் அடைந்து சங்கரருக்கு பகந்தரம் என்ற நோய் உண்டாகும்படி செய்தார். ஆனால் பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்த நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரை தாக்கியது.

உஜ்ஜைனியிலிருந்து புறப்பட்டு இமயமலையை வந்தடைந்தார். அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை தரிசித்து ஆசிபெற்றார். பிறகு தன் சீடர்களுடன் கங்கை நதி கரையில் சிலகாலம் தங்கினார்.

சங்கரர் சர்வக்ஞபீடத்தை அலங்கரித்தல்

காஷ்மீரத்தில் உள்ள அன்னை சாரதாதேவியின் ஆலயத்தில் ஒரு சர்வக்ஞபீடம் பீடம் இருக்கிறது. அந்த பீடத்தில் அனைத்தும் அறிந்த ஞானி மட்டுமே அமர முடியும். அந்த ஆலயத்தை சுற்றி நான்கு வாசல்கள் உள்ளது. அதில் கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு திசையில் இருந்து வந்த அறிஞர்கள் வென்று அந்த பீடத்தில் அமர்ந்ததால் அந்த கதவுகள் திறந்தபடி உள்ளது. ஆனால் இது வரை தெற்கு திசையில் இருந்து யாரும் வரவில்லை என்றனர்.

இதை கேள்விப்பட்ட சங்கரர் தென்திசை வழியாக உள்ளே செல்ல எண்ணினார். கோவிலின் தெற்கு வாயிலை அடைந்த சங்கரர் பல மத அறிஞர்களை வென்றார். தென்திசை கதவைத்திறந்து உள்ளே சென்று சிம்மாசனத்தில் அமர்ந்தார். அன்றிலிருந்து ஜகத்குரு என போற்றப்பட்டார். சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.

சங்கரர் மடங்களை நிறுவுதல்

சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.

பத்மபாதரை பீடாதிபதியாக கொண்டு கிழக்கே பூரி ஜெகந்நாத்தில் ரிக் வேத ப்ரதானமாக  கோவர்த்தன மடத்தை நிறுவினார்.

சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக கொண்டு தெற்கே யஜுர் வேத ப்ரதானமாக  சிருங்கேரியில் மடத்தை நிறுவினார்.

ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாக கொண்டு மேற்கே சாம வேத ப்ரதானமாக துவாரகாவில் மடத்தை நிறுவினார்.

தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக கொண்டு வடக்கே அதர்வண வேத ப்ரதானமாக பத்ரியில் ஜோதிர் மடத்தை நிறுவினார்.

சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னகர்ப கணபதி விக்ரகத்தையும் சுரேச்வரரிடம் கொடுத்து பூஜித்து வரும்படி கூறினார். இந்த பூஜையை இன்றும் சிருங்கேரி மடாதிபதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். சங்கரர் ஏற்றி வைக்த ஜோதி இன்றும் சிருங்கேரியில்  பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. 

சங்கரர் தன் உடலை தியாகம் செய்தல்

பிறகு அங்கிருந்து பத்ரி சென்று சிலகாலம் தங்கியிருந்தார். பின் கேதாரம் சென்றார். அங்கு நிலவிய கடும் குளிர் சீடர்களை வாட்டியது. சங்கரர் சிவபெருமானை வேண்டி ஒரு வெந்நீர் ஊற்று தோன்ற செய்தார். இன்றும் அந்த வெந்நீர் ஊற்று அங்கு காண கிடைக்கிறது.

ஒரு நாள் தான் வந்த பூர்த்தியாகிவிட்டதையும், தனது ஆயுட்காலம் முடியும் தருவாய் வந்துவிட்டதையும் உணர்ந்தார். எனவே தனது உடலை தியாகம் செய்ய முடிவு செய்தார்.  சங்கரர் தமது 32வது வயதில் சிவனது வாகனமாகிய காளையில் அமர்ந்து கைலாயம் சென்றார். 

சங்கரர் இந்த பூவுலகில் இருந்து மறைந்த, இமயமலையில் சுமார் 11,750 அடி உயரத்தில் உள்ள கேதாரநாத்தில் ஸ்ரீசங்கராச்சாரிய கைவல்யதாமா என்ற பெயரில் ஆலயம் அமைந்துள்ளது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

RELATED ARTICLES

Most Popular